கடலூரில் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்


கடலூரில் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புயல் எச்சரிக்கையையொட்டி கடலூரில் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

கடலூர்

மாண்டஸ் புயலையையொட்டி கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி கடலூர் மாநகராட்சியிலும் அனைத்து பிரிவு அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். 2 ஆயிரம் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரம், பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் புயலையொட்டி மரங்கள் சாய்ந்து விழாமல் தடுக்க மாநகர பகுதியில் சாலையோரம் இருந்த மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி பொறியாளர் (பொறுப்பு) மகாதேவன் தலைமையிலான ஊழியர்கள் மாநகராட்சி பகுதியில் பாரதிசாலை, செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். மேலும் கடைகளில் உள்ள விளம்பர, பெயர் பலகைகளை அகற்றவும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் மாநகராட்சி பகுதியில் முக்கிய இடங்களில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகளில், இருந்த மின்விளக்குகள் கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக சோனாங்குப்பம் கடற்கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டது. இதை அறிந்த மேயர் சுந்தரிராஜா, அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதி மக்களை மேடான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story