கடலூர் புதிய பஸ் நிலையம் விவகாரம்: பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் பொது நல அமைப்புகள் வலியுறுத்தல்


கடலூர் புதிய பஸ் நிலையம் விவகாரம்:  பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்  பொது நல அமைப்புகள் வலியுறுத்தல்
x

கடலூர் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பொது நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்

கடலூர்,

ஒரு நகரின் வளர்ச்சி என்பது போக்குவரத்தை சார்ந்தே அமைகிறது. அந்த வகையில் வங்க கடற்கரையோரம் அமைந்துள்ள கடலூர் மாநகரம் இதற்கு விதிவிலக்கு அல்ல. அன்று கப்பல், ரெயில் போக்குவரத்தை கையாண்ட இந்த நகரம், இன்று அத்தகையை வசதிகள் மெச்சும் வகையில் இல்லாமல் இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது நகருக்கு பெரும் பிரச்சினையாக எழுந்து நிற்பது சாலை போக்குவரத்தின் ஒரு அங்கமான பஸ்நிலையம். தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்நிலையம் குறுகலாக இருப்பதால் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மக்களிடையே எழுந்தது.

இதன் எதிரொலியாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது புதிய கலெக்டர் அலுவலகம் மேற்கு பகுதியில் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் 18½ ஏக்கர் நிலத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.36 கோடி நிதி ஒதுக்க நிர்வாக அனுமதியும் பெறப்பட்டது. அதன்படி புதிய பஸ் நிலையம் அமைக்க வல்லுனர் குழு ஆய்வு செய்து, முதல் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் எத்தனை பஸ்கள் வந்து செல்கிறது என்ற கணக்கெடுப்பு பணியும் நடந்தது.

இதற்கிடையில் தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும், கலெக்டர் அலுவலகத்தின் மேற்கு பகுதியில் பஸ் நிலையம் அமைத்தால், அதனை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையாது என்று கணக்கெடுக்கப்பட்டது.

இடமாற்றம்

இதன் காரணமாக கரும்பு ஆராய்ச்சி பண்ணை இடத்தில் பஸ் நிலையம் வராது என்று மாவட்ட நிர்வாகம் கூறியது. இதற்கான இடத்தையும் மாற்றியது. தொடர்ந்து வேறு இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது. அதன்படி கடலூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் மாநகர மைய பகுதியில் தான் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொது நல அமைப்புகள், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகிறது. போராட்டங்களையும் நடத்தி வருகிறது.

2 பஸ் நிலையம்

புதிய பஸ் நிலையம் அமைப்பது பற்றி கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மருதவாணன் கூறுகையில், புதிய பஸ் நிலையம் மாநகர மையப்பகுதியில் தான் அமைய வேண்டும்.

அதன்படி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கரும்பு ஆராய்ச்சி பண்ணையில் புதிய பஸ் நிலையம் அமைத்தால் நன்றாக இருக்கும். இதை மாற்றக்கூடாது. மாற்ற வேண்டும் என்று அரசு, மாவட்ட நிர்வாகம் விரும்பினால், இங்கு விழுப்புரம், புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பஸ் நிலையமாக மாற்றிக்கொள்ளலாம்.

எம்.புதூரில் விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் விரைவு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையமாக மாற்றிக்கொள்ளலாம். 2 பஸ் நிலையங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளது. ஏற்கனவே வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்து தான், கரும்பு ஆராய்ச்சி பண்ணையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அதேபோல் கஸ்டம்ஸ் சாலையை விழுப்புரம் வரை நீட்டித்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது.

கருத்து கேட்பு கூட்டம்

தற்போது உள்ள திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதற்கான இடமும் உள்ளது. புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள், பொது நல அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி, அதன் பிறகு இறுதிமுடிவு எடுக்க வேண்டும் என்றார்.

பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் கூறுகையில், பாதிரிக் குப்பத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். அங்கு வரதராஜபெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இதன் மூலம் அந்த பகுதி மேலும் வளர்ச்சி அடையும். இது பற்றி கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாதவன் கூறுகையில், பாதிரிக்குப்பத்தில் புதிய பஸ் நிலையம் அமைத்தால் நன்றாக இருக்கும். இருப்பினும் இது பற்றி மாவட்ட நிர்வாகம், அனைத்து அரசியல் கட்சி கள், பொதுமக்கள், பொது நல அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்க வேண்டும். தற்போது உள்ள பஸ் நிலையத்தை மேலும் விரிவுப்படுத்த வேண்டும். மஞ்சக்குப்பம், முதுநகரில் மாநகர பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.


Next Story