திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடினர்


திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடினர்
x

மகாளய அமாவாசையையொட்டி தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திருவாரூர்

மகாளய அமாவாசையையொட்டி தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மகாளய அமாவாசை

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்புக்குரியது. மேலும் நாள் முழுவதும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்குவது வழக்கம்.

மேலும் இயலாதவர்களுக்கு தானம் செய்தவதன் மூலம் முன்னோர்களின் ஆசி அவர்களது தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அதன்படி நேற்று மகாளய அமாவாசையொட்டி பிறக்க முக்தி தரும் தலமான திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் காலையில் இருந்து மக்கள் புனித நீராடினர்.

பின்னர் அங்குள்ள படித்துறைகளில் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதனால் காலை முதல் குளத்தின் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்தினை சீரமைக்க போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி-திருமக்கோட்டை

மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் தென்கரையில் நேற்று அதிகாலையில் இருந்தே நூற்றுக்கணக்கானோர் பச்சரிசி, காய்கறி உள்ளிட்டவைகளை படையலிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.இதனால அதிகாலை முதலே கூட்டம் குளங்கரையில் அதிக அளவில் காணப்பட்டது.

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் ஆலய திரிக்குளக்கரையில் பலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். மேலும் இங்கு உள்ள ராமர் பாதத்திலும், மண்டபத்திலும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருராமேஸ்வரம் கோவில்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம் திருராமேஸ்வரம் கோவிலில் மகாளய அமாவாசை வழிபாடு நடந்தது. ராமபிரான் சீதாதேவியை மீட்டுவரும்போது தனது தந்தைக்கு திதி வழங்க வேண்டி இருந்ததால் தனது வில்லை எடுத்து நீரூற்று உருவாக்கி அந்த தண்ணீரை கொண்டு தர்ப்பணம் செய்து ராமநாதசாமியை வணங்கிய இடம் திருராமேஸ்வரம் ஆகும். இந்த கோவிலில் நேற்று ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கோவிலின் மூலவர் ராமநாத சுவாமி மற்றும் மங்களாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story