கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலியாக, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை எதிரொலியாக, 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானல் நுழைவாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதேபோல் செண்பகனூர், புலிச்சோலை, பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு, உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
எனவே விடுமுறை நாட்களில், போக்குவரத்தை சீரமைக்க கொடைக்கானலில் கூடுதல் போலீசாரை நியமனம் செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடும் போக்குவரத்து நெருக்கடியை கடந்து கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள், பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.