மாட்டு வண்டி எல்கை பந்தயம்


திருமயம், கடையக்குடி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம் அருகே உள்ள சோளப்பிரட்டி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாவூர் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இருபிரிவாக நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் பந்தய தூரம் போய் வர 8 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 6 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. முதல் பரிசை தானாவயல் வெங்கடாசலம், 2-வது பரிசு தேனி கே.கே.பட்டி பொன்னையா, 3-வது பரிசு மாவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 9 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பந்தய தூரம் போய் வர 6 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் முதல் பரிசு மாவூர் ராமச்சந்திரன், 2-வது பரிசு பில்லமங்கலம் வாசுதேவன், 3-வது பரிசு துளையானூர் பாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இதையடுத்து, வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற மாவூர்- மதுரை பைபாஸ் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

குதிரை வண்டி

கடையக்குடி அருகே உள்ள அம்மையாபட்டி கிராமத்தில் உள்ள மண்டலமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை- அரிமளம் சாலையில் நடுமாடு, கரிச்சான் மாடு என இருபிரிவாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இதேபோல் பெரிய குதிரை, சிறிய குதிரை என இருபிரிவாக குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் கலந்து கொண்டன. பின்னர் வெற்றி பெற்ற மாடுகள் மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.


Next Story