இழப்பீடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு
தேனி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த மின்வாரிய ஊழியருக்கு இழப்பீடு வழங்காததால் 4 அரசு பஸ்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்
கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 52). இவர், மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி (42). இவர்களுக்கு ஜான் (18) என்ற மகன் உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஆறுமுகம் தனது மனைவி, மகனுடன் மோட்டார் சைக்கிளில் தேனி-கம்பம் சாலையில் பழனிசெட்டிபட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், ஆறுமுகம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஜெயந்திக்கு கையில் எலும்பு முறிந்தது. ஜானுக்கு லேசான காயத்துடன் தப்பினார். அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இழப்பீடு கேட்டு வழக்கு
இதில் ஆறுமுகம் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கோமா நிலைக்கு சென்றதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அவருடைய உடல் நிலை கருதி, அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்கு பதில், ஜெயந்திக்கு மின்வாரிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆறுமுகத்துக்கு ரூ.35 லட்சம், ஜெயந்திக்கு ரூ.4½ லட்சம் என இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்கப்படவில்லை.
4 அரசு பஸ்கள் ஜப்தி
இதையடுத்து வக்கீல் பாண்டிச்செல்வி மூலம் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜெயந்தி நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில், 4 அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டு அமீனா ஹரிகரபாண்டி மற்றும் மனுதாரர் ஜெயந்தி உள்ளிட்டோர் தேனி புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று வந்தனர்.
பாதிக்கப்பட்ட ஆறுமுகத்தையும் அவர்கள் சக்கர நாற்காலியில் அழைத்து வந்தனர். முதற்கட்டமாக மதுரைக்கு செல்ல இருந்த ஒரு அரசு பஸ்சை மட்டும் அவர்கள் ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட அந்த பஸ் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.