2-வது நாளாக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


2-வது நாளாக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

கொல்லங்கோடு நகராட்சியில் கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு நகராட்சியில் கவுன்சிலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

கொல்லங்கோடு நகராட்சியில் அவசர கூட்டம் நேற்றுமுன்தினம் காலையில் நகராட்சி ஆணையர் தலைமையில் நடந்தது. அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள், நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் கிடப்பில் உள்ளதாகவும், ஆணையர் தற்காலிக ஊழியர்களை மிரட்டுவதாகவும் பல்வேறு புகார்களை கூறினர். இதனால் கோபமடைந்த ஆணையர் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே சென்றார்.

இதையடுத்து ஆணையரை கண்டித்து தலைவர் உள்பட 33 கவுன்சிலர்களும் நகராட்சி அலுவலகத்தின் முன்பக்கத்தில் வரிசையாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய நடந்தது. இதனால் அலுவலகம் இரவிலும் மூடப்படவில்லை.

2-வது நாளாக...

நேற்று காலையில் 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து மதியம் கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், நகராட்சி அலுவலகத்துக்கு வந்து கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து தாசில்தார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதனையடுத்து மீண்டும் போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. இரவில் நெல்லை மண்டல நகராட்சிகளின் இயக்குனர் விஜயலட்சுமி சம்பவ இடத்துக்கு வந்து கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கவுன்சிலர்களின் கோரிக்கையை எழுத்து பூர்வமாக எழுதி கொடுக்கும்படியும், அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இரவு 7.30 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் நேற்று நகராட்சி அலுவலகத்தில் தினசரி நடைபெறும் பணிகள் முடங்கின.


Next Story