உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யாததால் கவுன்சிலர்கள் போராட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தரை பாலம் அமைக்கும் பணியின் போது உடைந்த குடிநீர் குழாயை நெடுஞ்சாலை துறை சரி செய்ய நடவடிக்கை எடுக்காததால் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தரை பாலம் அமைக்கும் பணியின் போது உடைந்த குடிநீர் குழாயை நெடுஞ்சாலை துறை சரி செய்ய நடவடிக்கை எடுக்காததால் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரைப்பாலம் அமைக்கும் பணி
வாணியம்பாடி முதல் திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை ரூ300 கோடியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் மழை நீர் தேங்கும்போது அப்பகுதியில் உள்ள கடைகளுக்குள் சென்று விடுவதால் அந்தப் பகுதியில் சிறு தரைப்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 1,ம் தேதி அந்தப் பகுதியில் பெரிய பள்ளம் தோண்டினார்கள்.
அப்போது திருப்பத்தூர் 36-வது வார்டுக்கு குடிநீர் சப்ளை செய்யும் மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய், அம்பலூர் மற்றும் தென்பண்ணையாறு கூட்டுக் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் திருப்பத்தூர் நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
மேலும் குடிநீரும் வீணாக வெளியேறிக் கொண்டிருந்தது. உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க கூறினார்கள். ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்யாமல் மற்ற பணிகளை முடித்து கான்கிரீட் போடும் வேலைகளை செய்திருந்தனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக திருப்பத்தூர் நகரில் விநியோகம் செய்ய முடியவில்லை. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் உடனடியாக உடைந்த குழாய்களை சரி செய்ய நகராட்சி பொறியாளர் கூறியும் ஒப்பந்ததாரர்கள் குழாய் உடைப்பை சரி செய்யாமல் இருந்தனர்.
கவுன்சிலர்கள் போராட்டம்
இதனை அறிந்த கவுன்சிலர் இ.அய்யப்பன், தலைமையில் நேரில் சென்று கேட்டபோது சரியான பதில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த, கவுன்சிலர்கள் குட்டி என்கின்ற சீனிவாசன், மதன், நாகு கோபிநாத், சுதாகர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்ததாரரிடம். ''கடந்த 3 நாட்களாக திருப்பத்தூர் நகரில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. பொதுமக்களுக்கு பதில் கூற முடியவில்லை என கூறி பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் நேரில் வந்து தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பணிகளை செய்து முடிக்க கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்த பிறகு கான்கிரீட் போடுவதா தேசிய நெடுஞ்சாலை துறை தரப்பில் ஒப்பு கொண்டனர்.