மழை பெய்யாததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம்


மழை பெய்யாததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம்
x

முதுகுளத்தூர் அருகே மழை பெய்யாததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே மழை பெய்யாததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மிளகாய், பருத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தைவிட மிளகாய், பருத்தி உள்ளிட்ட விவசாயத்தில் தான் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முதுகுளத்தூர், தேரிருவேலி, காக்கூர், சிக்கல் உள்ளிட்ட பல ஊர்களிலும் பருத்தி மற்றும் மிளகாய் விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு பருத்தி சீசன் தொடங்கி உள்ளதை தொடர்ந்து முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி, கருமல், மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், காக்கூர், விளங்குளத்தூர், மைக்கேல் பட்டினம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் பருத்தி செடி நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல் பருத்தி செடிகளுக்கு இடையே வளர்ந்து நிற்கும் களைகளை அகற்றும் பணியிலும் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பருத்தி செடிகள் ஓரளவு வளர்வதற்கு முதலில் ஒரு மழையாவது பெய்ய வேண்டும். ஆனால் பருவமழை சீசன் தொடங்கியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை முழுமையாக இல்லாததால் விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

நடவு பணி

இதுகுறித்து விளங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணி கூறியதாவது:- கடந்த ஆண்டு பருத்தி விளைச்சல் எதிர் பார்த்ததைவிட நன்றாகவே இருந்தது. அதுபோல் பருத்தி விளைச்சல் தொடங்கிய சீசனின்போது ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விலை போனது. ஆனால் பருத்தி சீசன் முடிவடையும் தருவாயில் விலை குறைந்து ஒரு கிலோ ரூ. 60 வரை மட்டும் தான் விலை போனது.

இந்த ஆண்டும் பருத்தி விவசாயத்தை நம்பி பருத்தி செடி நடவு பணியை தொடங்கி உள்ளோம். நல்ல விளைச்சல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறோம். வழக்கமாக பருத்திச்செடி நடவு தொடக்கத்தில் ஓரளவு மழை இருந்தால் செடி வளர்வதற்கு நல்ல சூழ்நிலை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அந்த அளவு மழை பெய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story