அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பங்கேற்றார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்து ஆண்டு அறிக்கை வாசித்தார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய ஒரு வேலையை பெறவேண்டும் என்றார். தொடர்ந்து பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் மாணவர்களை பாராட்டினார். விழாவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வணிகவியல் துறைகளை சேர்ந்த 675 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. முடிவில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்றனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.