தொடரும் 'ஆன்லைன்' மோசடி: பெண் டாக்டரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்'


தொடரும் ஆன்லைன் மோசடி: பெண் டாக்டரிடம் ரூ.95 ஆயிரம் அபேஸ்
x

சென்னையில் செல்போனில் அனுப்பிய லிங்கை திறந்த பெண் டாக்டரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் பணம் ‘அபேஸ்’ செய்யப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (வயது 53). டாக்டரான இவருடைய செல்போன் எண்ணில் நேற்று முன்தினம் பேசிய மர்மநபர் ஒருவர், "நான் மின்சாரத்துறையில் இருந்து பேசுகிறேன். நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தாமல் உள்ளீர்கள். உடனே பணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். நான் அனுப்பும் லிங்கில் பணத்தை உடனே செலுத்துங்கள்" என்று கூறினார்.

இதனால் பதற்றமடைந்த டாக்டர் ஷோபனா, அது உண்மை என நினைத்து அந்த நபர் செல்போனில் அனுப்பிய லிங்கை திறந்துள்ளார். சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதன்பிறகுதான் மோசடி ஆசாமியின் வலையில் சிக்கி பணத்தை இழந்ததை டாக்டர் ஷோபனா உணர்ந்தார்.

இந்த நூதன மோசடி குறித்து அவர் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். செல்போன் எண்ணுக்கு வரும் இதுபோன்ற லிங்கை திறக்க வேண்டாம் என்று போலீசார் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் படித்தவர்களும் ஏமாறுவதை கண்டு போலீசார் வேதனை அடைகின்றனர்.


Next Story