நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஆய்வு


நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 5 May 2023 12:30 AM IST (Updated: 5 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் முறைகேடு குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஆய்வு செய்தார்.

தேனி

நெல் கொள்முதல் நிலையம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கூடலூர் அரசமர பஸ் நிறுத்தம் அருகே வேளாண் மைய கிட்டங்கியில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்நிலையில் கூடலூரை சேர்ந்த விவசாயிகள் அழகு தேவன், ஜெயராஜ், ராஜேந்திரன் ஆகியோர் உட்பட 9 பேர்கள் தாங்கள் விற்பனை செய்த நெல் மூட்டைகளில் ஒரு மூட்டைக்கு 40 கிலோ 600 கிராமுக்கு பதிலாக கூடுதலாக 4 கிலோ அல்லது 5 கிலோ இருப்பதாகவும், 1 மூட்டைக்கு எடைகூலி ரூ.35 என கட்டாயப்படுத்தி வசூல் செய்ததாகவும் புகார் கூறினர்.

மேலும் இதுகுறித்து கூடலூர் முல்லைசாரல் விவசாயிகள் சங்கம், பாரதீய கிஷான் சங்கம் ஆகியவை மூலம் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையம் மற்றும் தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது.

அதிகாரி ஆய்வு

இதனைத் தொடர்ந்து நேற்று நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் விற்பனை செய்த நெல் மூட்டைகளை சரிபார்த்தபோது அதில் 4 கிலோ, 5 கிலோ என கூடுதல் நெல் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து மூட்டைகளையும் சரிபார்த்து கூடுதல் எடை உள்ள நெல்லுக்கு ஏற்ப பணத்தை அந்தந்த விவசாயிகளுக்கு கொடுக்கவும், ஒரு மூட்டைக்கு எடை கூலி ரூ.35 வாங்கியது குறித்து 3 நாட்களில் விசாரணை செய்வதாகவும், அந்த பணத்தை திரும்ப வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து கூடலூர் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி, மண்டல மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் நிலையத்திற்குள் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட பதிவாளர், காவலாளி உள்பட 3 பேர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்படும் என்று அதிகாரி கூறினார்.


Related Tags :
Next Story