திருவள்ளூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கலந்தாலோசனை - கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமை தேர்தல் அதிகாரி, அரசு முதன்மை செயலர் அறிவுரை படியும், நகர் புறம் மற்றும் ஊரகப்பகுதியில் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை மறு சீரமைப்பு செய்து வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 657 முதன்மை வாக்குச்சாவடிகளில் புதிய பாகங்கள் ஏற்படுத்துதல், வாக்குச்சாவடி அமைவிடத்தை மாற்றுதல், பெயர் மாற்றம் மற்றும் பாகங்களில் உள்ள பிரிவுகளை சீரமைத்தல் செய்து வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கடந்த மாதம் 29-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது தேர்தல்) முரளி, தேர்தல் தனி தாசில்தார் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.