கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தீபாவளி போனஸ் ரூ.7 ஆயிரம் கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு எச்.எம்.எஸ். கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் பேரவை சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை தலைவர் ஆனந்தவேல் தலைமை தாங்கினார். இதில் மாநில இணை பொதுச்செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் சையது இபுராகிம், மாநில நிர்வாகிகள் இன்பராஜ், ஆரோக்கியம், கட்டுமான தொழிலாள்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். இதேபோல் 18 நலவாரியங்களிலும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையை பின்பற்ற வேண்டும். நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அரசு பணியை காரணம் காண்பித்து உரிமையை நிராகரிக்க கூடாது என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.