மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர், கான்கிரீட் கம்பிகள் குத்தி சாவு


மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர்,  கான்கிரீட் கம்பிகள் குத்தி சாவு
x

பாலத்தின் தூண் அமைக்க தோண்டிய குழியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர், கான்கிரீட் கம்பிகள் குத்தி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

சிவகங்கை

பாலத்தின் தூண் அமைக்க தோண்டிய குழியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர், கான்கிரீட் கம்பிகள் குத்தி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

கட்டிட தொழிலாளி சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் சேதுராமன்(வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் சிவகங்கையில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக தினமும் மோட்டார்சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.சேதுராமன் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

பனையூர் அருகே சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. பாலத்தின் தூண் அமைக்க பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. அந்த வழியாக வந்த சேதுராமன் அதை கவனிக்காமல் சென்றதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளுடன் அந்த குழியில் விழுந்தார்.

பாலத்தின் தூண்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த கான்கிரீட் கம்பிகள் மீது போய் விழுந்ததில், கம்பிகள் குத்தி படுகாயம் அடைந்தார். பின்னர் அங்கேயே சேதுராமன் பரிதாபமாக இறந்து கிடந்தார்.

உடல் மீட்பு

இரவு நேரம் என்பதால் இதை யாரும் கவனிக்கவில்லை. நேற்று காலையில் பாலம் பணிக்காக வந்தவர்கள், சேதுராமன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சிவகங்கை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சேதுராமன் உடலை மீட்டு பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்்.

அறிவிப்பு பலகை

விபத்து நடந்த இந்த தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலை நடைபெறும் இடங்களில் அறிவிப்பு பலகை மற்றும் இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story