தற்காலிகமாக 90 கடைகள் கட்டும் பணி தொடக்கம்


தற்காலிகமாக 90 கடைகள் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 9 Aug 2023 1:45 AM IST (Updated: 9 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்து விட்டு, புதிய கடைகள் கட்டப்பட உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக 90 கடைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்து விட்டு, புதிய கடைகள் கட்டப்பட உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக 90 கடைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

பழமையான கட்டிடங்கள்

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,327 கடைகள் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்கள் என்பதால், 3 கட்டங்களாக பழைய கடைகளின் கட்டிடங்களை இடித்து விட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இதற்காக கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.07 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 192 கடைகளை இடிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே சென்னையில் இருந்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில், வியாபாரிகளுக்கு கடை வைக்க மாற்றிடம் ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே புதிய கடைகள் ஏலம் முறையில் ஒதுக்கப்படும் என்று தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்கெட் வியாபாரிகள் அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி கட்டினர்.

தற்காலிக கடைகள்

மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாற்றிடத்தில் கடை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து, தற்காலிகமாக கடை அமைத்து தரவும், புதிய கடைகள் கட்டிய பின் 192 வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தநிலையில் தற்போது ஊட்டி ஏ.டி.சி. வாகன நிறுத்தும் இடத்தில், மார்க்கெட் வியாபாரிகளுக்காக தற்காலிக கடை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், பொறியாளர் சேர்மகனி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில், முதல் கட்டமாக ரூ.40 லட்சம் செலவில் 90 கடைகள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் அடுத்த 2 வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, கடைகள் வியாபாரிகளுக்கு ஒப்படைக்கப்படும் என்றார்.


Next Story