பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட காங்கிரஸ் பிரமுகர் கைது
மார்த்தாண்டத்தில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட காங்கிரஸ் பிரமுகர் கைது
குழித்துறை,
மார்த்தாண்டம் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் ராஜன் சேவியர்(வயது 53), காங்கிரஸ் பிரமுகர். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி ராஜன் சேவியர் மதுபோதையில் அதே பகுதியை சேர்ந்த ரவியின் மனைவி காஞ்சனா (54) என்பவரை தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்தார். இதுகுறித்து அவர் மார்த்தாணடம் போலீசில் புகார் செய்தார். இதனால், அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜன் சேவியர் வாசலில் அமர்ந்துள்ளார். பின்னர், வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பெண்களிடம் தகாத வார்த்தையால் பேசி ஆபாச செய்கைகளை செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெண்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் அனைவரும் அங்கு திரண்டு வந்து ராஜன் சேவியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ராஜன் சேவியரை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் அவர் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் போலீசார் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர்.