சேலம் சத்திரம் பகுதியில்கேட்பாரற்று நின்ற காரில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்போலீசார் விசாரணை
சேலம்
சேலம் சத்திரம் ரெயில்வே கூட்ஸ்ஷெட் பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள்
கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சிலர் காரில் கடத்தி வரும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.
அதேநேரத்தில் மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடியில் போலீசார் அவ்வப்போது சோதனை செய்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் குட்கா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குட்கா பறிமுதல்
இந்த நிலையில், சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு சத்திரம் ரெயில்வே கூட்ஸ்ஷெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு லாரிகள் நிறுத்துமிடம் பகுதியில் மராட்டிய மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் நீண்டநேரமாக கேட்பாரற்று நின்றிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்காவுடன் காரை பறிமுதல் செய்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த கார் யாருடையது? என்பது தெரியவில்லை.
தடை செய்யப்பட்ட குட்காவை சேலத்திற்கு காரில் கடத்தி வந்தது யார்? இங்கு யாருக்கு குட்காவை கொடுக்க கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.