சேலம் மணியனூரில்காரில் கடத்திய 472 கிலோ குட்கா பறிமுதல்டிரைவர் உள்பட 2 பேர் கைது
அன்னதானப்பட்டி
சேலத்தில் காரில் கடத்தி வந்த 472 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து
சேலம் மணியனூர் பகுதியில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காரில்சிலர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும், காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை, மூட்டையாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கார் டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
கைது- பறிமுதல்
அவர்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜாளூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 25), உத்தரப்பிரதேசம் மாநிலம், சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த கரண்குமார் (24) என்பது தெரிந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக, வாழப்பாடிக்கு குட்காவை காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து டிரைவர் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான 472 கிலோ குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.