வன அதிகாரிகளை கண்டித்து கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு; மசினகுடியில் பரபரப்பு
மசினகுடியில், வன அதிகாரிகளை கண்டித்து கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்: மசினகுடியில், வன அதிகாரிகளை கண்டித்து கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் புறக்கணித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வன அதிகாரிகளை கண்டித்து புறக்கணிப்பு
சுதந்திர தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டது. இதேபோல் கூடலூர் அருகே உள்ள மசினகுடியில் ஊராட்சித்தலைவர் மாதேவி மோகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர், அமைப்புகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில், மசினகுடி ஊராட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது முதுமலை பழங்குடியினர் நலச்சங்கம், நீலகிரி மோட்டார் டிரைவர் யூனியன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் வனத்துறையினருக்கு எதிராக பல புகார்களை கூறினர். குறிப்பாக வாழைத்தோட்டம் பகுதியில் பழைய தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டுவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். புதிய வீடுகள் கட்டவும், உள்ளூர் மக்களின் வாகன போக்குவரத்துக்கும் தடை விதித்து வருகின்றனர். எனவே, ஊராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு தடை விதிக்கும் சம்பந்தப்பட்ட வன அதிகாரிகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் கூட்டத்தில் வன அதிகாரிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் புறக்கணிப்பு செய்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சூரிய சக்தி மின்வேலி
இதேபோல் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் குங்கூர்மூலா அரசு பள்ளிக்கூட வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுனில் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உடனடியாக வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வனத்திலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளில் சூரிய சக்தி மின்வேலி அமைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செயலாளர் மணி கோரிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக கிராம சபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.