தேசிய வாக்காளர் தினவிழா:போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுவிழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது


தேசிய வாக்காளர் தினவிழா:போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுவிழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

தேசிய வாக்காளர் தினவிழாவையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கினார். இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது.

வாக்காளர் தின விழா

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி, தேர்தல் விழிப்புணர்வு நாடகங்கள், வாக்காளர் விழிப்புணர்வு பாடல் கலைநிகழ்ச்சிகள், ஓவியப் போட்டி, மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளைவழங்கினார்.

மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை சிறப்பாக மேற்கொண்ட 52 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது :-

ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் உரிமையும், வலிமையும் உள்ளது என்கிறது தேர்தல் ஆணையம். அதனால் தான் ஜனவரி25 -ந் தேதி இளைஞர்களிடையே வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் தேர்தல் ஆணையம்1950-ம் ஆண்டு ஜனவரி 25 -ந் தேதி அமைக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் அதன் தொடக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

80 சதவீதம் நிறைவு

வாக்குரிமையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரையும் வாக்களிக்க வைக்கும் நோக்கத்தில், தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையம் இந்நாளில் பிரசாரத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. ஆதார் எண்ணை வாக்காளர் எண்ணுடன் வாக்காளர் உதவி மைய செயலி மூலம் இணையவழியில் இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இப்பணியை சிறப்பாக செய்த அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக கலெக்டர் தலைமையில் "இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றி வேறு ஏதேனும் தூண்டுதல்களின்றி வாக்களிப்போம் என்று இதனால் உறுதியளிக்கிறோம்".என மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதையொட்டி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், தாசில்தார் சக்திவேல், அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story