பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து  கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருநெல்வேலி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன், நெல்லை மண்டல செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வண்ணார்பேட்டையில் இருந்து ஊர்வமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் வண்ணார்பேட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்தனர். போராட்டத்தையொட்டி நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

களக்காடு- வள்ளியூர்

களக்காட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன் உள்பட 26 பேர் சாலைமறியல் செய்தனர். அவர்களை களக்காடு போலீசார் கைது செய்தனர்.

வள்ளியூரில் ராதாபுரம் மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி ராதாபுரம் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம் தலைமையில் 4 பெண்கள் உட்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் அம்பை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

திருவேங்கடம்- கடையம்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மெயின் பஜாரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் தாலுகா செயலாளர் அந்தோணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்குறிச்சியில் அரிகரன் தலைமையிலும், சிவகிரியில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், ராயகிரியில் நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.


Next Story