பல்வேறு வழக்குகளில் தொடர்பு:பெண் கஞ்சா வியாபாரிகள் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


பல்வேறு வழக்குகளில் தொடர்பு:பெண் கஞ்சா வியாபாரிகள் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பெண் கஞ்சா வியாபாரிகள் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தேனி

5 பெண்கள் கைது

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கோடாங்கிபட்டி பகுதியில் கஞ்சா கடத்திய சிலரை தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் பிடித்தனர்.

இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காமயகவுண்டன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த காளிமுத்து மனைவி அங்குத்தாய் (வயது 48), கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வம் மனைவி சரஸ்வதி (57), பெருமாள் மனைவி சந்திரா (51), குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி சுமித்ரா (40), காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி சாந்தி (48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 கிலோ 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குண்டர் தடுப்பு சட்டம்

கைதான 5 பேரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைதான 5 பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது. தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவதால் அவர்கள் 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் பெண் கஞ்சா வியாபாரிகளான அங்குத்தாய், சரஸ்வதி, சந்திரா, சுமித்ரா, சாந்தி ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதையடுத்து நிலக்கோட்டை பெண்கள் சிறையில் இருந்த அவர்கள் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story