பெண்ணிடம் ரூ.33 லட்சம் மோசடி; கல்லூரி பேராசிரியர் கைது
கல்லூரியில் பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார். அவருடைய மகள், மருமகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரியில் பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார். அவருடைய மகள், மருமகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரி பேராசிரியர்
தேனி மாவட்டம் போடி அமராவதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருடைய மனைவி லதா (வயது 42). இவர் கணித பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்தநிலையில் லதா, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ரவி (59), எனது கணவருக்கு ஏற்கனவே பழக்கமானவர். அவர் தனது மகள் சபீதா, மருமகன் விக்னேஷ்குமார் ஆகியோருடன் கடந்த 2017-ம் ஆண்டு எனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்கள் எனக்கு உசிலம்பட்டி அல்லது சிவகாசியில் உள்ள கல்லூரியில் நிரந்தர கணித பேராசிரியர் பணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினர்.
ரூ.33 லட்சம் மோசடி
அதை நம்பிய நானும் வங்கி கணக்கு மூலம் ரூ.28 லட்சத்தை அவர்களுக்கு அனுப்பினேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை எதுவும் வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். பணத்தை திருப்பிக்கேட்டதால், கடந்த 7-ந்தேதி அவர்கள் மீண்டும் எனது வீட்டுக்கு வந்தனர். அப்போது மதுரையில் உள்ள தங்களின் சொத்தை விற்பனை செய்து பணத்தை கொடுத்து விடுவதாகவும், அந்த சொத்து ரூ.5 லட்சத்துக்கு அடமானத்தில் உள்ளதாகவும் கூறினர். ரூ.5 லட்சம் கொடுத்தால் சொத்தை மீட்டு விற்பனை செய்து மொத்த பணத்தையும் கொடுத்து விடுவதாக கூறினர். அதை நம்பி நான் ரூ.5 லட்சம் கொடுத்தேன். ஆனால், பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
கைது
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாசலபதி இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையை தொடர்ந்து ரவி, அவருடைய மகள் சபீதா, மருமகன் விக்னேஷ்குமார் ஆகிய 3 பேர் மீதும் நேற்று முன்தினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ரவியை போலீசார் கைது செய்தனர். அவரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சபீதா ஒரு கல்லூரியில் பேராசிரியையாகவும், விக்னேஷ்குமார் மற்றொரு கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.