மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்


மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:15 AM IST (Updated: 20 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பழனி வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 365 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள், தக்க செயலிகளுடன் கூடிய கைப்பேசி என 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்து 530 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பழனி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story