கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழுதடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழுதடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. அதில் 2 குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. பொதுமக்கள் அந்த குடிநீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயின் ஒரு வால்வு பகுதி உடைந்து உள்ளது. இதனால் அதில் இருந்து குடிநீர் வருவது இல்லை. கடந்த 2 வாரங்களாகவே இதே நிலையில் தான் இருக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தாளவாடி, அந்தியூர், சென்னிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து அதிகாரிகளை பார்த்து செல்கிறோம். இதனால் சில மணி நேரம் காத்து நிற்கும் சூழல் நிலவுகிறது. அப்போது தாகம் ஏற்பட்டால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதற்காக இங்கு வந்து தண்ணீரை குடித்து, பாட்டிலிலும் பிடித்து சென்றோம். தற்போது பயன்படாமல் கிடப்பது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயின் வால்வு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றனர்.