ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டையை ஒப்படைக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டையை ஒப்படைக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டையை ஒப்படைக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பு
பெருந்துறை அருகே உள்ள வள்ளிபுரத்தான் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் விஜயபாலன், சாதிக், பழனிச்சாமி, அம்ஜத்கான், பால்ராஜ் ஆகியோருடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்போவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் தங்கள் கோரிக்கை குறித்து மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மனுவை மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் வழங்கினார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
பெருந்துறை அருகே வள்ளிபுரத்தான்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். அதற்கு ஏற்ப வள்ளிபுரத்தான்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கண்டறிந்து அந்த இடத்தை வழங்குமாறு வருவாய்த்துறை அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
நடவடிக்கை
பெருந்துறை தாசில்தாருக்கு எங்கள் மனு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்த இடம் குறித்து பேசி அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அழைத்தனர். கிராம மக்கள் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தன்னுடன் சிலரை அழைத்து கொண்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
நாங்கள் கண்டறிந்த நிலத்தை வழங்கக்கூடாது எனக்கூறி எங்களை தாக்கி விரட்டினர். இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் யாரும் தடுக்க முயலவில்லை. எனவே அ.தி.மு.க. பிரமுகர் மீதும் அவருடன் வந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.