உள் விளையாட்டு அரங்கம், ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
ஏலகிரிமலை ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ரேஷன் கடைகளில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்
கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை ராட்சியில் ரூ.4 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அத்தனாவூர் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இருப்பில் வைக்கப்பட்டுள்ள பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய குடிமை பொருட்களின் எடைகளை சரிபார்த்தார். அதைத்தொடர்ந்து அத்தனாவூர் பகுதியில் உள்ள ஏலகிரி மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இயங்கி வரும் இ- சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தகவல் பலகை
அப்போது பொது மக்கள் அறியும்படி சான்றிதழ்பெறுவதற்காக தேவைப்படுகின்ற ஆவணங்களின் விபரங்கள் அடங்கிய தகவல் பலகை அமைக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அத்தனாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, நோயாளிகள் வருகை பதிவேட்டில் நோயாளிகளின் பெயர்களை தெளிவாக எழுதவும், சுகாதார நிலையத்தில் பணியாளர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்ணுடன் கூடிய தகவல் பலகை வைக்கவும் ஏறிவுரை வழங்கினார்.
ஆய்வுகளின் போது மருத்துவ அலுவலர் சுனித்தா, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஏலகிரி மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்க உதவி செயலாளர் சுகுமார், ரேஷன்கடை விற்பனையாளர், செவிலியர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.