வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கவசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பழுதுபார்த்தல் பணிகள், புதிதாக வகுப்பறைகள் கட்டும் பணிகள், கீழூர் பகுதியில் ரூ.8½ லட்சத்தில் புதிய நெற்களஞ்சியம் அமைக்கும் பணிகள் முடிவுற்றதையும், வேப்பங்கனேரி ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்குள்ள சத்துணவுக் கூடத்தில் சிதிலம் அடைந்த மேற்கூரை குறித்து கேட்டறிந்து அதனை உடனடியாக சரிசெய்யும் படி உத்தரவிட்டார்.
விரைந்து முடிக்க உத்தரவு
தொடர்ந்து, வடுகந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய பள்ளிக் கட்டிடம் கட்டப்படுவதையும், வடுகந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும், பஸ் நிறுத்தத்துடன் கூடிய வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தாலுகா அலுவலத்தின் பின்புறம் சுமார் ரூ.27 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் தாசில்தார் குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார், துணை தாசில்தார், நில அளவீடு செய்பவர்கள், அனைத்து வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் தீட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியினை விரைந்து முடிக்கவும், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளரச்சி திட்டம், பட்டா உட்பிரிவில்லா பட்டா மாற்றம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம், பட்டா இல்லாதவர்களை கிராமங்கள் வாரியாக கண்டறிந்து வீட்டு மனை வழங்குதல், வேளாண் அடுக்கு திட்டத்தின் ஆதார் அட்டை, சிட்டா, வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது கே.வி.குப்பம் ஒன்றியக் குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், தாசில்தார் அ.கீதா, செயற் பொறியாளர் செந்தில்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.