வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
ஆற்காடு நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது உழவர் சந்தையை பார்வையிட்ட அவர் அங்கு விவசாயிகள் உள்ளனரா அல்லது வியாபாரிகள் உள்ளனரா என கேட்டறிந்தார். பின்னர் அங்கு இயற்கை முறையில் தேன்மற்றும் சிறுதானிய கஞ்சி வகைகள் தயாரிக்கும் கடை வைத்திருப்பவர்களிடம் விற்பனைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பார்த்திபன் நகர் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகள் பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகளையும் விரைவாக முடிக்கும்படி ஒப்பந்ததாரரிடம் கேட்டுக் கொண்டார்.
தோப்புக்கானா பகுதியில் அமைந்துள்ள நகர்புற நல வாழ்வு மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆற்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட உள்ளதால் அந்த இடத்தில் மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டியதையும் நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், மருந்துகள், உரங்கள் மற்றும் இருப்பு அறையை பார்வையிட்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன், மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயபிரகாஷ், வேளாண்மை துறை கண்காணிப்பாளர் கோபி, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராஜ்குமார், உதவி நிர்வாக அலுவலர் யோகேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.