ஈரோட்டில்அரசு மாதிரி பள்ளிக்கூடத்தில் கலெக்டர் ஆய்வு; மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார்
ஈரோட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கூடத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்து மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
ஈரோட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கூடத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்து மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
மாதிரி பள்ளிக்கூடம்
ஈரோடு- பெருந்துறை ரோட்டில் ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கூடம் (பழனிச்சாமி கல்லூரி வளாகத்தில்) இயங்கி வருகிறது. இங்கு பிளஸ்-2 வகுப்பில் 139 மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 வகுப்பில் 87 மாணவ-மாணவிகளும் படித்து வருகிறார்கள். அரசின் மாதிரி பள்ளிக்கூடத்தில் படிக்க சிறப்பு தகுதி பெற்ற மாணவ- மாணவிகள் கல்வித்துறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு இங்கு படிக்க வைக்கப்படுகிறார்கள். அரசின் முழு நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவ- மாணவிகள் போட்டித்தேர்வுகள், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. உண்டு- உறைவிட வசதியுடன் இயங்கும் இந்த பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த பள்ளிக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கூட வகுப்பறைகள், தொழில்நுட்ப அறை, நூலகம், விடுதி மற்றும் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் மாணவர்களின் விவரங்கள், வருகைப்பதிவு குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்தார்.
பின்னர் மாணவ- மாணவிகளுடன் உற்சாகமாக கலந்துரையாடிய கலெக்டர் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
சாதனையாளர்கள்
அரசு வழங்கி இருக்கும் இந்த வாய்ப்பை மாணவ- மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கேட்டுக்கொண்டார்.
மேலும், 'தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புவது. திட்டமிட்டு படித்தால் ஐ.ஏ.எஸ். ஆகலாம். முதலில் மாணவர்கள் தங்கள் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இலக்கை அடைய புத்தகங்கள் படிக்க வேண்டும். தடை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதை தகர்த்துவிட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து சாதனையாளர்களாக உருவாக வேண்டும். வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்' என்றார்.
பரிசு
இந்த நிகழ்வின் போது மாணவ-மாணவிகள் தாங்கள் படைத்த கவிதைகளை கலெக்டரிடம் வாசித்து காட்டினர். பாடல் திறமை, பேச்சு மற்றும் நடிப்பு திறன்களையும் காண்பித்தனர். அவற்றை பார்த்து மகிழ்ந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, புத்தகங்களில் கையொப்பமிட்டு பரிசாக வழங்கினார்.
கலெக்டருடன் உதவி கலெக்டர் (பயிற்சி) வினய்குமார் மீனா, துணை கலெக்டர் (பயிற்சி) காயத்திரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தை ராஜன், உதவி திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.
முன்னதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கோபால், ஒருங்கிணைப்பாளர் மாதுனியாள் ஆகியோர் வரவேற்றனர்.