கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
தஞ்சை அருகே பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை அருகே பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தஞ்சையை அடுத்த திருவையாறு ஒன்றியம் கடுவெளி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியையும், மேலபுனவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கழிவறை கட்டும் பணியையும், கல்யாணபுரம் 2-ம் சேத்தியில் செயல்படும் பொது வினியோக திட்ட அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு குறித்தும், கண்டியூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் கால்நடை மருந்தகத்தினையும் ஆய்வு செய்தார்.
அடையாள அட்டை
தொடர்ந்து திருவேதிக்குடி அருகே ரெட்டைவாய்க்கால், புனவாசல் வாய்க்கால், மாத்தூர் அருகே அய்யனார் மாத்தூர் வாய்க்கால் ஆகியவற்றில் நீர்வளத்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.முன்னதாக தஞ்சை மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நேற்று நடந்த மருத்துவ முகாமை பார்வையிட்ட கலெக்டர், அந்த முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.ஆய்வின்போது திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி, ஜான்கென்னடி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.