பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்: கோவை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
பிரேத பரிசோதனை செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கோவை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை:
கோவை வெரைட்டி ஹால் ரோடு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது53). இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 23-ந் தேதி தேதி கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (43) என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தற்கொலை வழக்குப்பதிவு செய்து அருளானந்தம் விசாரணை நடத்தினார். பாலமுருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. பிரேத பரிசோதனை முடித்து உடலை பாலமுருகனின் உறவினரிடம் ஒப்படைக்கும் பணியில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் அருளானந்தம் இருந்தார்.
இதற்கான ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கான செலவு 4 ஆயிரம் ரூபாய் ஆகும் என்றும், அவருக்கு ரூ.2 ஆயிரம் என்றும் கூறி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்போன் மூலம் வீடியோவில் பதிவு செய்து யூடியூப் சேனலிலும் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோவையும் பார்வையிட்டு துணை கமிஷனர் சிலம்பரசன் விசாரணை நடத்தினார்.
விசாரணையை தொடர்ந்து அருளானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து துணை கமிஷனர் உத்தரவிட்டார். பிரேத பரிசோதனை என்ற பெயரில் லஞ்சம் வசூலித்தால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.