கோவை: வீட்டில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்- அதிர்ச்சியில் உறைந்த போலீசார்
கோவை அருகே வீட்டில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக 2000 ரூபாய் போலி நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த விருதுநகரை காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்பது அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப், 4 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக ஜடகோபால் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இருடியம் இருப்பதாக சொல்லி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.