லக்காபுரத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு
லக்காபுரத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு
மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் பகுதியில் தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யும் பணி ஏராளமான விசைத்தறி கூடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார், மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் லக்காபுரத்துக்கு வந்து அங்குள்ள விசைத்தறி கூடங்களில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேட்டி, சேலைகளின் தரம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். மேலும் இலவச வேட்டி, சேலைகளை அரசின் விதிப்படி முறையாக உற்பத்தி செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்று கைத்தறி துறை அதிகாரிகளுக்கு அவர்கள் ஆலோசனை கூறினா். அதுமட்டுமின்றி இலவச வேட்டி, சேலைகளின் உற்பத்தியை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர்கள் அறிவுரைகள் வழங்கினர். மேலும் கோவை மண்டல கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் இந்த ஆண்டு தீபாவளிக்கான விற்பனை குறியீட்டை அடைய தேவையான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
ஆய்வின் போது கைத்தறித்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் அன்பழகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.