அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை
அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தோளூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோபி மகன் மவுலீஸ்வரன் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று இருந்தார்.
நேற்று மதியம் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டிந்தனர்.
கைகளால் தாக்கினர்
அப்போது, மாணவர்கள் சிலர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
தொடர்ந்து அவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது இதில் நிலை தடுமாறிய மவுலீஸ்வரன் அருகே இருந்த மரத்தில் முட்டி கீழே விழுந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் மாணவர் அலறி துடித்தார்.
சாவு
மாணவரின் அலறல் சத்தத்தை கேட்டு விரைந்து வந்த ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மவுலீஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் பள்ளி முன்புள்ள திருச்சி-நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 மாணவர்களை தனியாக அழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.