கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் - பஸ் நிறுத்தத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
திண்டுக்கல் அருகே பைக் நிறுத்துவதில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் தனியாருக்கு சொந்தமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இன்று காலையில் கல்லூரி வளாகத்திற்குள் பைக் நிறுத்துவதில் இரண்டு ஊர்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சமாதானம் அடைந்து சென்று விட்டனர். இந்த நிலையில் மாலை கல்லூரி முடிந்து வளாகத்திற்கு வெளியே வந்த போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
கல்லூரியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இருதரப்பினரும் தகராறு செய்தவாறே நடந்து வந்துள்ளனர். அய்யலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்களும் காயமடைந்தனர்.
பின்னர் அனைவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.