அறச்சலூரில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல்; கடைகளும் அடைக்கப்பட்டதால் பரபரப்பு


அறச்சலூரில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல்; கடைகளும் அடைக்கப்பட்டதால் பரபரப்பு
x

அறச்சலூரில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

அறச்சலூர்

அறச்சலூரில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

அறச்சலூர், வடுகப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அறச்சலூர் போலீஸ்நிலையம் எதிரே செல்லும் சாலை மற்றும் கொடுமுடி கைகாட்டி பிரிவு, தலவு மலை பகுதி என 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அறச்சலூர் நல்லமங்காபாளையத்தை சேர்ந்த சமூகநீதி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் வடிவேல்ராமன் சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இந்த சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் அறச்சலூர் பகுதியில் நேற்று கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் அறச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசாரிடம், வடிவேல்ராமனை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் அங்கு விரைந்து சென்றார். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புகார் கொடுங்கள்

அப்ே்பாது அவர் கூறும்போது, 'உங்கள் பிரச்சினை குறித்து புகாராக எழுதி கொடுங்கள். அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதைத்தொடர்ந்து வடிவேல் ராமன் மீது அறச்சலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இரவு 10.40 மணி அளவில் பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்கள், கடையடைப்பு காரணமாக அறச்சலூர் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story