மூதாட்டி கொலையில் பெண்ணை கைது செய்யக்கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
மூதாட்டி கொலை வழக்கில் பெண்ைண கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். காயல்பட்டினம் நகராட்சி 9-வது வார்டு லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், காயல்பட்டினம் நகராட்சி 9-வது வார்டு லட்சுமிபுரம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. ஆகையால் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடந்த 30-ந்தேதி கடலுக்குள் மூழ்கி சென்று கப்பலுக்கு அடியில் பணி செய்த தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த சாம்ராஜ் (வயது 27) என்பவர் இறந்து உள்ளார். அவரது சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவரது தலையில் காயங்கள் காணப்படுகின்றன. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
பா.ஜனதா மாவட்ட செயலாளர் சங்கரநாராயணன் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், துணைத்தலைவர்கள் வாரியார், சிவராமன், பொதுச்செயலாளர் சத்தியசீலன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி 51-வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 51-வது வார்டு பகுதியில் மழைக்காலங்களில், பிறப்பகுதிகளில் இருந்து வந்து சேர்ந்த மழைநீர் மற்றும் கழிவுநீர் பல இடங்களில் இன்னும் வெளியேற்றப்படாமல் தேங்கி நிற்கிறது. இதன்மூலம் நோய்த்தொற்று பரவி மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பகுதியில் தேங்கி உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் ஊரைச் சேர்ந்த மீனாட்சி (85) என்பவரை கொலை செய்து நகையை சிலர் பறித்து சென்று உள்ளனர். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணை மட்டும் போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். அந்த பெண்ணையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.