குடிநீர் கேட்டு காலிக்குடங்களை தலையில் வைத்து பொதுமக்கள் மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களை தலையில் வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம்:
குடிநீர் பற்றாக்குறை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி தெற்கு தெரு (கொட்டாக்காடு) பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தவசீலன் தலைமையில் தத்தனூர் மேலூரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களை தலையில் வைத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அனால் எங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் கடந்த 3 மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. சாலை வசதி இல்லாததால் வயலுக்கு மழை காலங்களில் சென்று விவசாயம் செய்ய முடியாமல் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து வந்த உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் ஜெயங்கொண்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் உள்பட பலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.