அந்தியூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அந்தியூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

அந்தியூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அந்தியூர் பர்கூர் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி அருகே அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட 3-வது மற்றும் 9-வது வார்டு பொதுமக்கள் நேற்று காலை 11 மணி அளவில் காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

குடிநீர் வழங்க வேண்டும்

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கூறும்போது, 'அந்தியூர் பேரூராட்சி மூலம் அந்தியூர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மூலம் வாரம் ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு் வருகிறது. ஆனால் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட ஆற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

அதற்கு பேரூராட்சி செயல் அதிகாரி கூறும்போது, 'தவுட்டுப்பாளையம் பாலம் விரிவாக்கம் பணியால் குடிநீர் குழாைய மாற்றி அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் குடிநீர் வழங்கப்பட முடியவில்லை. பணி முடிந்தவுடன் உடனடியாக வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட ஆற்று நீர் வழங்கப்படும்' என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு லாரி மூலம் ஆற்று நீர் வினியோகம் செய்யப்பட்டது.


Next Story