ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பு
ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் போராட்டம்
ஈரோடு திருநகர் காலனி கே.என்.கே. ரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சத்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் நிர்வாகிகளாக இருந்து விழாக்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட சமூகத்தினரும், பொதுமக்களும் நேற்று காலை கே.என்.கே. ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா பிரபு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, 'சக்தி விநாயகர் கோவில் எங்களுக்கு பாத்தியப்பட்டது. அறநிலையத்துறையினர் இந்த கோவிலை எடுக்கக்கூடாது. நாங்களே தொடர்ந்து நிர்வகிக்க வழிவகை செய்ய வேண்டும்' என்றனர்.
அதற்கு போலீசார் 'உங்களுடைய கோரிக்கை குறித்து மனுவாக எழுதி கொடுங்கள். பின்னர் மாவட்ட நிர்வாகத்துடன் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதன்பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக கே.என்.கே. ரோட்டில் சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.