பொதுமக்கள், மாணவர்கள் திடீர் மறியல்
தியாகதுருகத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள், மாணவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கண்டாச்சிமங்கலம்
5 ஆண்டுகளுக்கு முன்பு
தியாகதுருகம் பேரூராட்சிக்குட்ட உதயமாம்பட்டு பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தியாகதுருகத்தில் இருந்து உதயமாம்பட்டு செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் தூர தார்ச்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலையின் வழியாக அந்தியூர், சிக்காடு, சீதேவி, கல்சிறுநாகலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.
சாலை மறியல்
தற்போது இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உதயமாம்பட்டு பகுதி மக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் உதயமாம்பட்டு பிரிவு சாலை அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குண்டும், குழியுமான சாலையால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியவில்லை. அவ்வப்போது விபத்துகளும் நிகழ்வதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறி விரைந்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
6 பேர் மீது வழக்கு
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் சிவலிங்கம் மகன் ஏழுமலை, குருநாதன் மகன் கண்ணன், கன்னியப்பன் மகன் சண்முகம், கட்டியப்பன் மகன் பிரகாஷ், ஆறுமுகம் மகன் ராஜா, ஜெயராமன் மகன் அசோக்குமார் ஆகிய 6 பேர் மீதும் அனுமதி இன்றி சட்டவிரோதமாக ஒன்றுகூடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சாலை மறியலால் தியாகதுருகம்-உதயமாம்பட்டு இடையே சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.