பூண்டி மாதா பேராலய திருவிழா


பூண்டி மாதா பேராலய திருவிழா
x

தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பூண்டி மாதா பேராலயம்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் எழில் மிகு சூழலில் பூண்டி மாதா பேராலயம் அமைந்து உள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என அழைக்கப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.ன்னதாக அன்னையின் உருவம் வரையப்பட்ட கொடியை பக்தர்கள் பேராலயத்தை சுற்றி எடுத்துச்செல்ல, அலங்கரிக்கப்பட்ட அன்னையின் சிறிய சொரூபத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். அப்போது ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் நடந்தது.

கொடியேற்றம்

கொடி ஊர்வலம் கொடி மரத்தை அடைந்ததும் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றி வைத்தார். கொடி ஏற்றப்பட்டபோது பக்தர்கள் மரியே வாழ்க... என குரல் எழுப்பினர். அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின.தொடர்ந்து அன்னையின் பிறப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் அமல வில்லியம், அன்புராஜ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

தேர்பவனி

கொடியேற்றத்தை தொடர்ந்து அன்னையின் பிறப்பு பெருவிழாவை தொடர்ந்து தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. அன்னையின் பிறப்பு நாளாக கருதப்படும் வருகிற 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.அன்று இரவு 8.30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைக்கிறார்.

பாதுகாப்பு பணி

கொடியேற்றத்தையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் பேராலய வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.அன்னையின் பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு கோவில், கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீசார் செய்திருந்தனர்.விழா ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story