முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி வருகை; 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசிக்கு வருகிறார். அரசு சார்பில் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசிக்கு வருகிறார். அரசு சார்பில் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
தென்காசி வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று (வியாழக்கிழமை) தென்காசி வருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயிலில் புறப்பட்டார். அவருக்காக தனியாக ஒரு பெட்டி சகல வசதிகளுடன் இந்த ெரயிலில் இணைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்-கலெக்டர்
இன்று காலை 7 மணிக்கு தென்காசி ெரயில் நிலையத்திற்கு வந்து இறங்குகிறார்.
அங்கு தென்காசி விழா பொறுப்பு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ. மற்றும் திரளான தி.மு.க. தொண்டர்கள், அரசு அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.
சிறப்பான வரவேற்பு
அங்கிருந்து தென்காசி பழைய பஸ் நிலையம், மேலகரம் வழியாக குற்றாலம் சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அவர் செல்லும் வழிநெடுக தி.மு.க. கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் காலை 9-30 மணிக்கு மேல் சுற்றுலா மாளிகையில் இருந்து விழா நடைபெறும் கணக்கப்பிள்ளை வலசையில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்திற்கு வருகிறார்.
பிரமாண்ட பந்தல்-மேடை
அங்கு காலை 10-30 மணிக்கு மேல் விழா தொடங்குகிறது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 92 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலில் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். பயனாளிகளை அழைத்து வர 390 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. தூரத்தில் இருந்து வரும் பயனாளிகளுக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது.
3,500 போலீசார் பாதுகாப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் விழாவையொட்டி 10 மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்கு 3,500 போலீசார் நேற்று தென்காசி வந்து விட்டனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேரடியாக பார்வையிட்டு ஆலோசனை கூறினார்.
விழா முடிந்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜபாளையம் செல்கிறார்.
டி.ஜி.பி. ஆய்வு
இந்தநிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று தென்காசி வந்தார்.
அவர் விழா நடைபெறும் இடம் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.