அரசு பள்ளிகளில் செஸ் போட்டி


அரசு பள்ளிகளில் செஸ் போட்டி
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செஸ் போட்டி நடந்தது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

செஸ் போட்டி

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளுக்கான வட்டார மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான செஸ் போட்டி இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 16 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 10 தொடக்கப்பள்ளிகள் என 36 பள்ளிகளை சேர்ந்த 119 மாணவர்கள் 89 மாணவிகள் உள்ளிட்ட 208 பேர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகள் பல சுற்றுகளாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கீரமங்கலம்

கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவரங்குளம் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி நடந்தது. போட்டிகளை உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலர் தங்கமணி ஆய்வு செய்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டினார். இந்தப் போட்டியில் 65 பள்ளிகளில் இருந்து 115 மாணவர்களும் 92 மாணவிகளும் என 207 பேர் பங்கேற்றனர். போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து உள்ளிட்ட ஆசிரியர்கள் கண்காணித்தனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதியில் வட்டார அளவிலான செஸ் போட்டி பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியை சோம.நாராயணி வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, ஆசிரியர் பயிற்றுனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் செஸ் போட்டி பயிற்சியாளர் முகமது இக்பால் போட்டிக்கான விதிமுறைகள் குறித்து போட்டியாளர்களிடம் விளக்கி கூறினார். இதில் பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள ஆலவயல், மேலைச்சிவபுரி, மைலாப்பூர் உள்ளிட்ட 29 அரசு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் செஸ் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள 21 பள்ளிகளை சேர்ந்த 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட செஸ் போட்டி 5 சுற்றுகளாக கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களை பெறுகின்ற மாணவ-மாணவிகள் வருவாய் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்படுவார்கள். செஸ் போட்டிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். இதில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட உடற்கல்வி அலுவலர் தங்கராசு, மாவட்ட விளையாட்டு அலுவலர் முத்துக்குமார் மற்றும் அனைத்து பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

விராலிமலை

விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 38 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்று விளையாடினர். இப்போட்டியை விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி தொடங்கி வைத்தார். போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தாமரை செல்வன் தலைமை தாங்கினார். போட்டியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.சுதந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 13 பள்ளிகளை சேர்ந்த 86 மாணவ-மாணவிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


Next Story