சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலில் இந்த மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன


சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலில் இந்த மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன
x

சென்னை - கோவை வரையிலான வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் போட்டிபோட்டு முன்பதிவு செய்ததால் இந்த மாதம் இறுதி வரை இடமில்லாமல் நிரம்பியுள்ளது.

சென்னை,

சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதிவேக பயணம், குளிர்சாதன சொகுசு இருக்கைகள் உள்ளதால் இந்த ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 9-ந்தேதி முதல் தெற்கு ரெயில்வேயின் கால அட்டவணையுடன் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 8 பெட்டிகள் உள்ளன. இதில், 78 இருக்கைகள் கொண்ட 7 பெட்டிகள் சாதாரண வகையாகவும், 50 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டி 360 டிகிரியில் இருக்கைகளை திருப்பும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயிலில் 596 பேர் வரையில் பயணம் செய்ய முடியும். சென்னை சென்டிரலில் இருந்து கோவை செல்லும் இந்த அதிவேக ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்று செல்லும். இதனால், 5 மணி 50 நிமிடங்களில் பயணிகள் சென்னையில் இருந்து கோவை சென்றடைய முடியும். இந்த ரெயிலில் சாதாரண இருக்கைக்கு ரூ.1,365-ம், 360 டிகிரி சிறப்பு இருக்கைக்கு ரூ.2,485-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்களும், தொழிலதிபர்களும், ஐ.டி.ஊழியர்களும் ரெயில் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

முன்பதிவு முடிவு

சென்னை-கோவை விமான சேவையை ஒப்பிடும்போது வந்தே பாரத் ரெயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பயணிகள் கருதுகிறார்கள். இதனால், ரெயிலில் முன்பதிவு ஒரே நாளில் முடிந்து விடுகிறது. அந்தவகையில், சாதாரண இருக்கைக்கு 18, 25 மற்றும் 30 ஆகிய நாட்களில் மட்டுமே முன்பதிவு உள்ளது. அதுவும் இறுதி நிலையிலேயே உள்ளது. மற்றபடி, சாதாரண மற்றும் சிறப்பு இருக்கை அனைத்தும் நிரம்பிவிட்டது. இந்த மாதம் இறுதி வரை இடமில்லை. காத்திருப்போர் பட்டியலில் அதிகமானோர் உள்ளனர்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் கோவையை சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல அதிகமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜூன் மாதத்திற்கான முன்பதிவும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவும் அடுத்த ஓரிரு நாட்கள் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளதால் இதை16 பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 1,700 பேர் வரையில் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story