பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதையொட்டி அமராவதி அருகே எல்லைப்பகுதியில் சோதனை சாவடிகளில் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன.
பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதையொட்டி அமராவதி அருகே எல்லைப்பகுதியில் சோதனை சாவடிகளில் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன.
வாகன ேசாதனை
தமிழக-கேரள மாநிலத்தை இணைக்கும் வகையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக உடுமலையில் இருந்து மூணாறுக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் உடுமலை வனத்துறையினரும் சின்னார் சோதனைச்சாவடியில் அமராவதி வனத்துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது தவிர பழைய ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நோய் தடுப்பு சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது. அசாதாரண சூழல் நிலவுகின்ற போது கால்நடை துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் நோய் தடுப்பு நடவடிக்கையாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
இந்த சூழலில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு வாத்துகள் பலியானதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று தமிழக எல்லைப்பகுதியில் நோய்தடுப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வருகின்ற வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இது குறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோழி மற்றும் முட்டை ஏற்றிக்கொண்டு வருகின்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி பறவைக் காய்ச்சல் நோய் எதிரொலியாக உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பண்ணைகளில் அசாதாரண முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகள் பலியானால் அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.