திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 30 May 2023 7:50 AM IST (Updated: 30 May 2023 7:55 AM IST)
t-max-icont-min-icon

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

திருநள்ளாறு,

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வர்.

அந்த வகையில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் சாமிக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடந்து வருகிறது. விதவிதமான அலங்காரத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் மற்றும் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். தொடர்ந்து மகா தீபாராதனைக் காட்டப்பட்டு நேற்று பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியுள்ளார். காரைக்கால், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இருந்து தேரை பக்தி கோஷத்துடன் இழுத்து வருகின்றனர். ஏராளமான பக்தகோடிகள் மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருநள்ளாறு, நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story