தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சை பெரியகோவில்
தமிழரின் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக வானுயர காட்சி அளித்து கொண்டு இருக்கிறது தஞ்சை பெரிய கோவில். மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற இந்த பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும், சோழர் கால கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடந்தபோதிலும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக 18 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலை சுவாமி வீதிஉலா நடந்தது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை விண்ணப்பமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
தேரோட்டம்
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக பெரியகோவில் நடராஜர் சன்னதி மண்டபத்தில் இருந்து விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், கமலாம்பாளுடன் தியாகராஜர், நீலோத்பாலம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் ஸ்கந்தர் புறப்பாடு நேற்று காலை 5 மணி அளவில் நடந்தது. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை அடைந்தனர். அங்கு சுவாமிகளை வைத்து சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர்.
இதையடுத்து தியாகராஜர்-கமலாம்பாள் தேரில் எழுந்தருளினர். இதேபோல் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பாலம்பாள், சண்டிகேசுவரர் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளினர். தியாகராஜர்-கமலாம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து காலை 6.40 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.
பக்தி கோஷம் எழுப்பினர்
மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது அனைவரும் 'ஓம் நமசிவாய'... என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.
ஸ்கந்தர், விநாயகர், வள்ளி-தெய்வானை சுப்பிரமணியர் எழுந்தருளிய சப்பரங்கள் முன்னே செல்ல தியாகராஜர்-கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பின்னால் சென்றது. இதையடுத்து நீலோத்பாலம்பாள், சண்டிகேசுவரர் சப்பரங்கள் பின்தொடர்ந்து வந்தன. மக்கள் வெள்ளத்திற்கு நடுவே தேர் அசைந்தாடி சென்றது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
மேலவீதியில் புறப்பட்ட தேர், வடக்கு வீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய வீதிகளிலும் வலம் வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக மேலராஜ வீதியில் 3 இடங்களிலும், வடக்கு ராஜ வீதியில் 4 இடங் களிலும், கீழராஜ வீதியில் 4 இடங்களிலும், தெற்குராஜ வீதியில் 3 இடங்களிலும் தேர் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்து சாமிக்கு மாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினர்.
அசைந்தாடி வந்தது
வடங்களை பிடித்து இழுக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் கயிறு கட்டி பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பச்சைக்கொடி காட்டியபோது தேரை வடம் பிடித்து பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் இழுத்தனர்.
நான்கு வீதிகளிலும் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. தேரை நான்கு வீதிகள் சந்திப்பில் திருப்புவதற்கு பொக்லின் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தேரோட்டத்தை காண தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் தேரோட்டத்தை நடத்த தமிழக காவல் துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். நான்கு வீதிகளிலும் வலம் வந்த தேர் நண்பகல் 12.10 மணிக்கு தேர் நிலை மண்டபத்தை வந்தடைந்தது.
குருமகா சன்னிதானம்
தேரோட்டத்தில் சூரியனார்கோவில் ஆதீன 28-வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள், சாமிநாத தேசிகாச்சாரியார், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (பொறுப்பு) சூரியநாராயணன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 4-ந் தேதி(வியாழக்கிழமை) கொடிஇறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.